மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கனவே பதற்றம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், ஏமன் தலைநகர் சனாவில், உலகமே அதிர்ச்சியில் உறையும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களுக்குள் அதிரடியாகப் புகுந்து, அங்கிருந்த ஊழியர்களைக் கைது செய்துள்ளனர்.
ஆம், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் போன்ற மனிதாபிமானப் பணிகளைச் செய்யும் அமைப்புகளின் அலுவலகங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதுவரை, குறைந்தது 11 ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினர், அலுவலகங்களைச் சோதனையிட்டு, ஊழியர்களை விசாரித்து, ஐ.நா. சபைக்குச் சொந்தமான சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஊழியர்களை உடனடியாகவும், எந்த நிபந்தனையுமின்றியும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் பின்னணி, ரத்தமும், பழிவாங்கலும் நிறைந்தது. சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேல் நடத்திய ஒரு துல்லியமான வான்வழித் தாக்குதல்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்தத் தாக்குதலில், ஹவுத்திகளின் பிரதமர் அகமது அல்-ரஹாவி, வெளியுறவு அமைச்சர், துணைப் பிரதமர் உட்பட 5-க்கும் மேற்பட்ட மிக முக்கிய அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
இது ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு விழுந்த ஒரு மிகப்பெரிய அடி. தங்களின் ஒட்டுமொத்த அரசாங்கமே சிதைக்கப்பட்ட கோபத்தில், அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காசா போர் தொடங்கியதிலிருந்து, ஹவுத்திகள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதும், இஸ்ரேல் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது நமக்குத் தெரியும். சமீபத்தில்கூட, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை அவர்கள் ஏவினார்கள். இதனால், இஸ்ரேலில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புப் பதுங்கு குழிகளுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தங்கள் பிரதமர் கொல்லப்பட்ட பிறகும், ஹவுத்திகள் அடங்கியதாகத் தெரியவில்லை. அந்தக் குழுவின் தலைவர் அல்-ஹவுதி, ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சி உரையில், “இஸ்ரேலிய எதிரியை குறிவைக்கும் எங்கள் இராணுவ நடவடிக்கைகள் தொடரும், நிலையானது, மேலும் அதிகரிக்கும்” என்று சபதம் செய்துள்ளார்.
ஏற்கனவே, இஸ்ரேலியத் துறைமுகங்களுடன் வர்த்தகம் செய்யும் எந்த நிறுவனத்தின் கப்பல்களையும் தாக்குவோம் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். ஆக, ஒருபுறம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல், மறுபுறம் அதற்குப் பதிலடியாக ஐ.நா. ஊழியர்கள் கைது. இந்தச் சம்பவங்களால், ஏமன் ஒரு பரந்த போர்க்களமாக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.