தமிழக சட்டசபையில் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் முன்கூட்டியே அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆய்வு செய்து, அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
அதில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் “வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம்” அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதம் ரூ.2,500 வழங்கும் “மதிப்புமிகு மகளிர் திட்டம்”, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், பட்ஜெட் கூட்டத்தை புறக்கணிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று, கூட்டத்தொடரின் காலஅளவு குறித்து முடிவு செய்யப்படும். நாளை தமிழக சட்டசபையில் வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
