தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் ரூ. 1000 கோடி வரையிலான ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்துள்ளது.
இதையடுத்து தமிழக பாஜக சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “திமுக அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம் முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை.
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம்!” என பதிவிட்டுள்ளார்.