நிலத்தடி தொட்டிக்குள் திடீரென்று கார் முழுவதும் மூழ்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் பாதிப் பகுதிமீது சிமெண்ட் சிலாப்புகளை வைத்து மூடியுள்ளனர். மீதிக் கிணறு திறந்தவாறே இருந்தது.
மூடப்பட்டுள்ள அந்தக் கிணற்றின்மீது வழக்கம்போல கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்போது பெய்த கனமழை காரணமாக திடீரென்று சிலாப்புகளின் ஒரு பகுதி வலுவிழந்து உடைந்துவிட்டது. அதனால், அங்கிருந்த கார் ஒன்று கிணற்றுக்குள் முற்றிலுமாக மூழ்கியது.
கார் கிணற்றுக்குள் மூழ்குவதைக் கண்ட காரின் உரிமையாரும் மருத்துவருமான கிரண் தோஷி தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். அதன்பின் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரியவர, பம்ப் மூலம் கிணற்றிலுள்ள நீரை அகற்றிவிட்டு, கிரேன் மூலம் காரை வெளியே எடுத்தனர்.
சில மாதங்களுக்குமுன்பு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிப்போருக்கும், கிணற்றின்மீது கட்டடம் கட்டியுள்ளோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உள்ளது.