காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என திருத்தப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
மேலும், இதன்மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50 சதவீத தொகுதி உயர்வு வழங்கப்படுவதால் மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஆ.ராசா தெரிவித்தார். இதுதொடர்பாக கனிமொழி தலைமையிலான திமுக எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், இன்று சென்னை வரும் காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலினைச் சந்தித்து திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை வைக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு தமிழக அரசியல் மற்றும் கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
