EPFO-வின் புதிய திட்டம்… ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் சலுகை!

ஊழியர்களின் ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன்படி, ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் நிறுவனத்தின் சம்பளப் பட்டியல் மூலம் மட்டுமின்றி, UAN எண்ணைப் பயன்படுத்தி நேரடியாகக் கூடுதல் தொகையைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடந்த நவம்பர் 19, 2026 அன்று நடைபெற்ற EPFO-வின் 240-வது மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே நடைமுறைக்கு வரும்.

தற்போது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையுடன் நிறுவனத்தின் பங்களிப்பும் சேர்த்து EPFO-விடம் செலுத்தப்படுகிறது. கூடுதலாகச் சேமிக்க விரும்புவோர் VPF திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.

புதிய திட்டம் அமலுக்கு வந்தால், டெலிவரி ஊழியர்கள், உணவகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் டிப்ஸ் போன்ற கூடுதல் வருமானத்தின் ஒரு பகுதியையும் பிஎஃப் சேமிப்பாக மாற்ற வாய்ப்பு ஏற்படலாம்.

2025-26 நிதியாண்டுக்கு பிஎஃப் வட்டி 8.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் தொகைக்கும் பொருந்தக்கூடிய விதிகளின்படி வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது.

எனினும், வரிச் சலுகை, அதிகபட்ச முதலீட்டு வரம்பு உள்ளிட்ட விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்த வசதி தற்போது நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News