Friday, August 1, 2025

மூட்டை மூட்டையாக 1400 கிலோ கூல் லிப் மற்றும் புகையிலை கடத்தல்

கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்றில் கிருஷ்ணகிரியில் இருந்து சிறார்களுக்கான அழகுசாதன பொருட்கள், கோழி தீவனம் மற்றும் கால்நடை மருந்துகள் கொண்டு வருவது போல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தப்படுவதாக மதுரை மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பெயரில் புதூர் காவல்நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் புதூர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சர்வேயர் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியை தடுத்துநிறுத்தி ஓட்டுனரிடம் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தபோது சந்தேகமடைந்த காவல்துறையினர் கண்டெய்னரை திறந்து பார்த்து சோதனையிட்டனர்.

அப்போது கண்டெய்னர் லாரியில் குழந்தைகளுக்கான அழகு சாதன பொருட்கள் மற்றும் கோழி தீவனம் கால்நடை மருந்து பெட்டிகள் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப், கணேஷ் புகையிலை உள்ளிட்ட குட்கா பொருட்கள் 94 மூட்டைகளில் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்டெய்னர் லாரியை பின்தொடர்ந்து வந்த கார் மற்றும் சரக்கு வாகனம் வந்த நிலையில் அதனையும் காவல்துறையில் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது கண்டெய்னர் லாரியில் இருந்து குட்கா பொருட்களை சில்லறை விற்பனைக்காக வாங்க வந்தது தெரிய வந்துள்ளது

இதனையடுத்து கண்டெய்னர் லாரியை காவல்நிலையத்திற்கு எடுத்துசென்று லாரியில் கடத்தப்பட்டு வந்த 1400 கிலோ கூல் லிப் மற்றும் கணேஷ் புகையிலை ஆகியவற்றையும் சில்லறை விற்பனைக்காக குட்காவாங்க வந்த நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் சரக்கு வாகனங்களையும் புதூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியதாக லாரி ஓட்டுநர் மற்றும் சில்லறை விற்பனைக்கு குட்காவை வாங்குவதற்கு வந்த நபர்கள் என 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 1400 கிலோ குட்கா எங்கு கொண்டு செல்வதற்காக கடத்தப்பட்டது எனவும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்டை மாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு அதிகளவிற்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் கண்டெய்னர் லாரியில் உள்ள குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News