எம்ஜிஆரில்  தொடங்கி மணி ரத்னத்தில் முடிந்த பொன்னியின் செல்வன்

283
Advertisement

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மிக சிறந்த படைப்பாக கொண்டாடப்படும் பொன்னியின் செல்வனை, திரைக்காவியமாக மாற்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் 60 ஆண்டுகளாக முயன்று தோற்ற நிலையில், இன்று மணி ரத்னம் அந்த நீண்ட கனவை சாத்தியமாக்கி உள்ளார்.

‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு பொன்னியின் செல்வனில் இயக்கி நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர், கல்கி குடும்பத்தினரிடம் திரை உரிமையை உறுதி செய்து பட அறிவிப்பு விளம்பரத்தை ‘நடிகன் குரல்’ என்ற சினிமா பத்திரிக்கையில் வெளியிட்டார்.

ஆனால், அந்த காலகட்டத்தில் சமூகம் சார்ந்த படங்கள் மீதே மக்களின் கவனம் அதிகம் இருந்ததால் இம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1989இல் ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, PC ஸ்ரீராம் ஆகியோருடன் இளையராஜா இசையில் 2 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை இயக்க கமல் ஹாசன் திட்டமிட்டார்.

ஆனால், பட்ஜெட்டும் கதையை சுருக்கி மூன்று மணி நேரமாக எடுப்பதும் பெரிய சவால்களாக உருவெடுக்க கமலும் பொன்னியின் செல்வனை கைவிட்டார். 2000மாவது வருடத்தில் இருந்து பொன்னியின் செல்வன் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மணி ரத்னம், 400 கோடி பட்ஜெட்டில் கிட்டதட்ட 120 நாட்களில் பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மணி ரத்னம் போன்ற ஒரு இயக்குநர் கையால் படமாக்கப்பட காத்திருந்த கதையே இது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.