தலைநகர் டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி, ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் 22 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஐ.ஐ.டி-யில் பட்டம் பெற்று, குடிமைப் பணித் தேர்வுகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த ஒரு லட்சியப் பெண்ணின் வாழ்க்கை, பணத்தாசை பிடித்த ஒரு கயவனால் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த கொடூரக் கொலையில், அந்த குடும்பத்தின் முன்னாள் உதவியாளரான 23 வயது ராகுல் மீனா கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட அந்த நபர், தான் செய்த குற்றத்திற்காக எவ்வித வருத்தமும் இன்றி, “பணம் கொடுக்க மறுத்ததால் மற்றவை தானாகவே நடந்துவிட்டன” என்று மிகச் சாதாரணமாகக் கூறியிருப்பது போலீசாரையே அதிர வைத்துள்ளது.
இந்தக் கொலை அரங்கேறுவதற்கு முன்பே ராகுல் மீனா எவ்வளவு கொடூரமானவன் என்பது அவனது கடந்த காலச் செயல்கள் மூலம் தெரியவந்துள்ளது. டெல்லிக்கு வருவதற்கு முந்தைய நாள், ராஜஸ்தானின் அல்வாரில் தனது நண்பனின் மனைவியை அவன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். அங்கிருந்து தப்பிக்கத் தனது செல்போன்களை விற்று, வாடகை கார் எடுத்துக்கொண்டு டெல்லி வந்துள்ளான்.
அந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி வீட்டில் ஏற்கனவே வேலை செய்தவன் என்பதால், அவர்களுக்குத் தெரியாமல் வீட்டின் மாற்றுச் சாவியை எங்கு வைப்பார்கள், பெற்றோர்கள் எப்போது ஜிம்முக்குச் செல்வார்கள் என்ற ரகசியங்கள் அவனுக்கு அத்துபடி. அந்தப் பெண்ணின் தளம் நான்கு பூட்டுகளால் பாதுகாக்கப்பட்டிருந்தும், டிஜிட்டல் பாஸ்வேர்டுகளை அறிந்திருந்த ராகுல் மீனா, மிக எளிதாக உள்ளே நுழைந்துள்ளான்.
வீட்டிற்குள் நுழைந்தவன் அந்தப் பெண்ணின் படிக்கும் அறைக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளான். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த கனமான பொருளால் அந்தப் பெண்ணின் முகத்தில் தாக்கி, செல்போன் சார்ஜர் கேபிளால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான்.
அந்தப் பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்தபோது அவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அவன் ஒப்புக்கொண்டுள்ளான். பணத்தாசை பிடித்த அந்த மிருகம், வீட்டின் பயோமெட்ரிக் லாக்கரைத் திறக்க, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணின் விரலைப் பிடித்து ஸ்கேனரில் அழுத்தியுள்ளான். ஆனால் அது தோல்வியடைந்ததால், அங்கிருந்த ஸ்க்ரூடிரைவரைப் பயன்படுத்தி லாக்கரை உடைத்து 2.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பித்துள்ளான்.
குற்றத்தைச் செய்த பிறகு எவ்வித பதற்றமும் இன்றி தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிய அவன், துவாரகா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினான். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான அவன், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளான்.
பாதுகாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், நம் வீட்டு உதவியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஒரு இளம் பெண்ணின் எதிர்காலத்தைச் சிதைத்த அந்தக் கொலையாளிக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
