இந்தியத் தபால் துறை, தனது விரைவு தபால் சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் மற்றும் விதிகளை அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள், சாமானிய மக்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரிடமும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
இந்த புதிய நடைமுறையில் மிக முக்கியமான மாற்றமாக, அனுப்பப்படும் பொருட்கள் ‘ஆவணம்’ மற்றும் ‘பார்சல்’ என இரண்டு பிரிவுகளாகத் தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தேவையைப் பொறுத்துச் சரியான பிரிவைத் தேர்வு செய்து அனுப்ப முடியும்.
புதிய வரையறையின்படி, வங்கி பாஸ்புக், காசோலை புத்தகம், பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வங்கி கார்டுகள் போன்றவை ‘ஆவணம்’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 500 கிராம் வரையிலான வாழ்த்து அட்டைகள் மற்றும் ராக்கி உறைகளும் இந்தப் பிரிவிலேயே அடங்கும்.
மறுவிற்பனை மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட தாள்களும் இதில் அடங்கும். இதற்கு அப்பாற்பட்ட அனைத்து வணிகப் பொருட்களும், மறுவிற்பனை செய்யக்கூடிய பொருட்களும் ‘பார்சல்’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ற கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர்களின் அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டு, ’24 விரைவு தபால்’ மற்றும் ’48 விரைவு தபால்’ ஆகிய புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெயருக்கு ஏற்ப, 24 மணிநேரம் மற்றும் 48 மணிநேரத்திற்குள் தபால்கள் விநியோகம் செய்யப்படும்.
முதற்கட்டமாகச் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 முக்கிய நகரங்களில் மட்டுமே இந்தச் சேவைகள் கிடைக்கும். 24 மணிநேர விரைவு தபால் சேவைக்கு எடையைப் பொறுத்து 38 ரூபாய் முதல் 186 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 50 கிராமுக்கும் குறைவான ஆவணத்தை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப 38 ரூபாயும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப 94 ரூபாயும் வசூலிக்கப்படும்.
48 மணிநேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் 61 ரூபாய் முதல் 121 ரூபாய் வரை இருக்கும் எனத் தபால் துறை தெரிவித்துள்ளது. இதேபோல், மொத்தமாகப் பொருட்களை அனுப்பும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகை கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நடைமுறையால் ஆவணங்கள் மற்றும் பார்சல்கள் தரம் பிரிக்கப்பட்டு, குறித்த நேரத்தில் விநியோகிக்கப்படும் எனத் தபால் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தபால் நிலையங்களுக்குச் செல்பவர்கள் இந்த புதிய கட்டண மாற்றங்களை அறிந்து செயல்படுவது அவசியமாகும்.
