அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்த நிலையில் அதிரடியாக அதிமுக-வின் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். முன்னதாக, இந்த முறை கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் EPS தரப்பில் கசியவிடப்பட்டது.
மேலும், அவர் திமுக-வில் சேரப்போகிறார் என்றும் வதந்திகள் சமீபத்தில் காட்டுத்தீயாக பரவ, பொறுமை கடந்த செங்கோட்டையன் பொங்கிவிட்டார் என்கின்றனர் அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்களை பற்றி அறிந்தவர்கள்.
சமீபத்தில் மேற்கு மண்டலமான கோவையில் இருந்து, இபிஎஸ் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். அந்த நேரத்தில் ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கும்’ என முதல்வர் ஸ்டாலின் சூசகமாக ஒரு செய்தியை சொன்னார். தற்போது மேற்கு மண்டலத்தின் அதிமுக தளகர்த்தரான செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், ‘ஒரு வேளை இருக்குமோ’ என்று தான் கேட்க வைக்கிறது.
இதற்கிடையே, ஒருவேளை பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டால் செங்கோட்டையன், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை வைத்து பாஜக Game விளையாடலாம் என்றும் கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் எதுவுமே ஒத்துவராமல் செங்கோட்டையன் தனித்துவிடப்பட்டால், திமுக அவரை கைகொடுத்து தூக்கிவிட்டு அதிமுக-வுக்கு ஆட்டம் காட்டவும் தயங்காது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது குறித்து செய்திகள் பலவாறாக உலா வர ஆரம்பித்துள்ளன.