தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்ற நிலையில் மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் இந்த விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னதாக விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன் நடவடிக்கைள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.