சத்தியம் தொலைக்காட்சி 16ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் சத்தியம் தொலைக்காட்சிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் : ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் பணி என்பது, செய்திகளைத் தருவது மட்டுமல்ல, அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, பொதுமக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவற்றிற்குத் தீர்வு காண்பதும்தான். அந்த வகையில், சத்தியம் தொலைக்காட்சியின் பணி, உண்மையிலேயே சிறப்பாக இருந்து வருகிறது.
ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சி, பேரிடர் காலங்களில் செய்திகளை வெளியிடுவது மட்டுமின்றி, களத்தில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுவது, விவசாயிகள் குறித்த Friday for Farmers நிகழ்ச்சி என, பல தளங்களில் சத்தியம் தொலைக்காட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும், பூமியைக் காக்கும் திருவிழா என்ற பெயரில் 5 லட்சம் மரங்கள் என்ற இலக்கோடு, பல மாவட்டங்களில் மரங்கள் நட்டு, சத்திய வனம் என்ற பெயரில் பலன் கொடுத்து வருவது, உண்மையில் போற்றுதலுக்குரியது.
தனது 16 ஆவது ஆண்டில் சத்தியம் தொலைக்காட்சி அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாகம், ஊடகவியலாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும். தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்தியம் தொலைக்காட்சி, மேலும் பலபல ஆண்டுகள் நடுநிலையுடன் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக, அவற்றிற்குத் தீர்வு பெற்றுத் தரும் தூதுவனாகச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.