பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட கையோடு, இந்தியப் பொருளாதாரச் சந்தையில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று சாமானியர்களுக்கு நிம்மதி தரும் செய்தி, மற்றொன்று முதலீட்டாளர்களைக் கொஞ்சம் யோசிக்க வைக்கும் செய்தி!
முதலில் அந்த நல்ல செய்தியைப் பார்ப்போம். கடந்த சில நாட்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமையன்று ஒரு டாலர் கிட்டத்தட்ட 92 ரூபாயைத் தொடும் அளவுக்குச் சரிந்தது. ஆனால், திங்கட்கிழமையான நேற்று சந்தை தொடங்கியதும் ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘ஜம்ப்’ ஆகியுள்ளது. ஒரே நாளில் 47 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 91 ரூபாய் 51 காசுகளாக வலுப்பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இல்லாத மிகப்பெரிய ஏற்றம் இதுதான்!
ஆனால், மறுபுறம் கடன் பத்திரச் சந்தை அல்லது ‘பாண்ட் மார்க்கெட்’ (Bond Market) என்று சொல்லக்கூடிய சந்தையில் ஒரு பதற்றம் நிலவுகிறது. அரசின் 10 ஆண்டுக்கால கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் (Yield) 6.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜனவரி 2025-க்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச அளவாகும்.
இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ள பிரம்மாண்டமான கடன் திட்டம் தான்! 2026-27 நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு சந்தையில் இருந்து சுமார் 17.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. இது சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகம்!
அரசு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகப் பெற நினைப்பதால், சந்தையில் பணப்புழக்கம் இருக்குமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் நீண்ட கால முதலீடுகளைக் குறைத்துவிட்டு, குறுகிய காலத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
மேலும், நிதி பற்றாக்குறையை (Fiscal Deficit) 4.3 சதவீதமாகக் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ஒரு மெதுவான முன்னேற்றம் என்றாலும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே சந்தையின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்.
மொத்தத்தில், ரூபாய் தப்பித்துவிட்டது.. ஆனால் கடன் சுமை அதிகரித்துள்ளது!
