காஃபி மாஸ்டருக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியமா !

302
Advertisement

‘கஃபே காபி டே’, ‘ஸ்டார்பக்ஸ்’ போன்ற பிரபல காஃபி நிறுவனங்களில் என்றாவது ஒருநாளாவது  காஃபி அருந்தியிருப்பீர்கள். சிலர் மட்டுமே  ரெகுலராகவே இதுபோன்ற பிராண்டட் செயின் நிறுவனங்களில் காஃபி அருந்துவதையும், அங்கு சில ஸ்நாக்ஸ் சாப்பிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்.சாதாரண சாலையோரக் கடைகளில் காஃபி என்பது சூடான பானம் மட்டுமே. ஆனால், இதுபோன்ற நட்சத்திர கடைகளில் காஃபி என்பதே ஒரு கலைநயமிக்க ராயலான பானமாக இருக்கும். சுவை, பிரெசென்டேஷன் என பல வகைகளில் வாடிக்கையாளர்களின் மனதை ஈர்க்கக் கூடியதாக இங்கு பல ரகங்களில் காஃபி கிடைக்கும். அப்படியானால், அதற்கு ஏற்றாற்போல திறமையான மாஸ்டர் வேண்டுமல்லவா !

அதுபோன்ற ஒரு மாஸ்டரை பல நாட்களாக தேடியும் கிடைக்காத காரணத்தால், அதிரடியான சம்பளத்துடன் விளம்பரத்தை வெளியிட்டு அசத்தியுள்ளது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘குட் கார்டெல்’ என்ற கஃபே நிறுவனம். பொதுவாக டேட்டூ கலைஞர்கள், சலூன் மாஸ்டர்கள், வளர்ப்பு பிராணிகளை கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் போன்றோருக்கு அதிக சம்பளம் கிடைக்காது. ஆனால், குட் கார்டெல் நிறுவனத்தில், காஃபி மாஸ்டருக்கு ஆண்டு ஒன்றுக்கு 92,000 ஆஸ்திரேலிய டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.50.7 லட்சமாகும்.

சம்பளம் அதிகம் என்றாலும், இந்த வேலையில் சேருவதற்கு சில  நிபந்தனைகளும்  உண்டு.  அதாவது, வார இறுதி நாட்கள் உட்பட வாரத்தில் 5 நாட்களுக்கு வேலை இருக்கும். குறிப்பாக, வாரம் ஒன்றுக்கு 47 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஒருவேளை வார இறுதி நாட்களில் உங்களுக்கு விடுமுறை வேண்டும் என்று நினைத்தால், மற்ற 5 நாட்களில் வேலை செய்து கொள்ளலாம். ஆனால், அப்படி செய்தால் ஆண்டு ஊதியம் ரூ.45.7 லட்சம் மட்டுமே.கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, பணியாளர்கள் கிடைக்கவில்லை என்பதால், இத்தகைய கவர்ச்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக குட் கார்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.