தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அவதிப்படுவதைத் தடுக்கவும் தமிழக அரசு ஒரு மிகப்பெரிய அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயப் பணிகளை மேம்படுத்த விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய சிறப்புத் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக இந்த நிதி உதவியை விவசாயிகள் மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
விவசாய நிலத்தில் புதிய மோட்டார் பம்ப் செட் அமைப்பது, நிலத்தைச் சீரமைத்து மேம்படுத்துவது மற்றும் அறுவடைக்குத் தேவையான நவீனக் கருவிகளை வாங்குவது போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்கு இந்தக் கடனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, விவசாயத் தேவைகளுக்காகச் சிறு அளவிலான சூரியசக்தி மின் நிலையங்கள் அல்லது சோலார் பேனல்கள் அமைக்கவும் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன்களுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும் நிலையில், அதனை உரியக் காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 5 லட்சம் ரூபாய் கடன் திட்டம், பிரத்யேகமாக வேளாண் மேம்பாட்டுப் பணிகளுக்காக வழங்கப்படுவதால், இதன் மூலம் விவசாயிகள் கந்துவட்டி கொடுமையிலிருந்து முழுமையாக விடுபட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 5,000 கோடி ரூபாய் வரை இத்தகைய கடன்களை வழங்கக் கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
தண்ணீர் வசதி, மின்சாரச் செலவு குறைப்பு மற்றும் நிலத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது எனப் பல வழிகளில் இந்தக் கடன் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்
இந்தக் கடனைப் பெற விரும்பும் விவசாயிகள், தங்களின் பகுதிக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகித் தகுதி மற்றும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் இந்த உன்னத முயற்சி விவசாயத் துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
