செம்பலா

250
Advertisement

மாதச் சம்பளம் சொளயா கிடைக்குல்ல…
என்பதுபோன்ற உதாரணப் பேச்சுகளைப் பலர்
பேசக் கேட்டிருப்போம்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இப்படி
அடிக்கடி பலர் மேற்கோள் காட்டுவர்.

இந்தச் சுளை என்பது பலாப் பழத்தைத்தான் குறிக்கும்
என்பது நமக்கெல்லாம் தெரிந்த சேதிதான்… வேறெந்த
பழத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பை இந்தப் பேச்சுவழக்கே
நன்கு உணர்த்திவிடுகிறது.

இது பலாப் பழக் காலம்..

குறைந்த விலையில் கிடைக்கும் பழம்… சத்துகள் நிறைந்த
பழம்… எல்லாரும் விரும்பும் பழம்…

அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் பழம்.. எண்ணற்ற
சத்துகள் பலாப் பழத்தில் உள்ளன என்பது நாமறிந்ததுதான்.

எளிதில் செரிமானம் அடைந்துவிடுமளவுக்கு நார்ச்சத்து
நிரம்பியுள்ள பழம். அதனால் செரிக்குமா, செரிக்காதா
என்னும் கவலை உண்பவருக்கு இல்லை. குடல்புண்
இருப்பவர்களும் கவலைப்படாமல் சாப்பிடலாம்.

குடல்புண்ணைக் குணமாக்கும். வைட்டமின் ஏ, சி சத்துகளும்,
ரிபோபிளேவின், பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், புரதம்
போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன.

பலாவில் உள்ள கரோட்டினாய்டு, டைப் 2 நீரிழிவுக் குறைபாடு
ஏற்பாடு வராமல் காக்கிறது. இதய நோய், புற்று நோய் வராமலும்
தடுக்கிறது. பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தைக்
கட்டுப்படுத்துகிறது பலாப் பழம். ரத்த சோகை ஏற்படாமலும் காக்கிறது.

வைட்டமின் ஏ சத்து நிரம்பியுள்ளதால் பலாப் பழத்தைப்
பருவ காலம்தோறும் தின்றுவந்தால் கண்பார்வைக் குறைபாடு
வராது. கண்பார்வையும் தெளிவாக இருக்கும். தோல்
மினுமினுப்பாகும். இளமையோடும் இருக்கலாம்.

பலாப் பழத்தை உண்போருக்கு தைராய்டு பிரச்சினை
ஏற்படுவதில்லை. பலாப் பழத்தைத் தின்போருக்கு குடல்புற்று
வருவதில்லை.

இளநரை, பொடுத் தொல்லை, தலைமுடி உதிர்வால்
கவலைப்படுவோர் அடிக்கடி பலாப்பழம் தின்றுவந்தால்
கவலை நீங்கும். ஆஸ்துமா தொல்லை அகல பலாப் பழத்தைத்
தினமும் தின்னலாம்.

வீடுகளிலும் வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கப்படும் மரங்களுள்
மாமரத்துக்கு அடுத்தபடியாக உள்ளது பலா மரம்.

பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் ஆண்டுமுழுவதும் விளையும்.

ஆனால், தமிழகத்தின் இதர பகுதிகளில் குறிப்பாக, கேரளத்தை
ஒட்டியுள்ள பகுதிகளிலும் கேரளாவிலும் பலாப் பழம் விளைவது
பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில்தான்
விளைச்சல் அதிகமாக இருக்கும்.

இந்தக் காலத்தில் இங்கு விளையும் பலாப் பழங்கள் மணமும்
சுவையும் தித்திப்பும் நிறைந்தவை என்பது இப்பகுதியில் விளைந்த
பலாப் பழத்தை சுவைத்தவர்கள் அறிவர்.

மஞ்சள் நிறப் பலாச் சுளையை எல்லாரும் பார்த்திருப்போம்,
ரசித்து சாப்பிட்டிருப்போம். ஆனால், செந்நிறமாக உள்ள பலாச்
சுளையை சாப்பிட்டிருக்கிறீர்களா…

தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலர் செம்பலாவைப்
பார்த்திருப்பர், சாப்பிட்டிருப்பர்.

மஞ்சள் நிறப் பலாச் சுளையைவிட செம்பலா தின்பதற்கு
எளிதாக இருக்கும்.

மஞ்சள் நிறச் சுளை சவ்வுத் தன்மை கொண்டது- வாயிலிட்டு
சுவைக்கும்போது சவ்வு மிட்டாய்போல சிறிது நெகிழ்வுத்
தன்மையுடன் இருக்கும். அதனால் சுவைத்து மென்று தின்பதற்கு
சிறிதுநேரமாகும்.

ஆனால், செம்பலா கிழங்கைப்போல் கடித்துத் தின்னலாம்.
மிகுந்த சுவையோடிருக்கும்.

அளவோடு தின்று பலாப் பழம் தரும் பலன்களைப் பெறலாம்.
அதிகமாகத் தின்றால் வயிறு உப்பிசம், வயிற்று வலி, வயிற்றழச்சல்
ஏற்படலாம். இதனைத் தவிர்க்க பலாக்கொட்டை ஒன்றைப்
பச்சையாக மென்று தின்னவேண்டும்.

பலாப் பழத்தின் முழுப்பலனையும்பெற, தின்றுமுடிந்ததும் பால்
அருந்தவேண்டும் அல்லது பாலில் பலாப் பழச்சுளைகளை
வேகவைத்து தின்ன வேண்டும்.

தூயதேன் தொட்டும் பலாச் சுளைகளைத் தின்று முழுப்பலனைப்
பெறலாம். அல்லது நெய்யைத் தொட்டு பலாச்சுளையை சுவைத்துத்
தின்னலாம். அல்லது நாட்டுச் சர்க்கரை சிறிதளவு சேர்த்து பலாச்
சுளைகளை ரசித்து சுவைத்துண்ணலாம்.

அப்பண்டிஸ் எனப்படும் குடல்வால் அழற்சி உள்ளவர்கள்
பலாப் பழம் தின்னக்கூடாது. உடற்சூட்டை அதிகப்படுத்தி
வயிற்றிலுள்ள சிசுவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்
என்பதால் கர்ப்பிணிப் பெண்கள் பலாப் பழம் உண்பதைத்
தவிர்க்கவேண்டும்.

பலாப் பழ ஆசை யாரை விட்டது? அளவோடு சாப்டுங்க…
ஆரோக்கியமா இருங்க…உடம்ப வலுவாக்கிங்க…