அடேங்கப்பா……எம்புட்டு சீர்வரிசை…. பல தலைமுறைக்கு உக்காந்தே
சாப்டலாம் போலிருக்கே…

799
Advertisement

திருமண சீர்வரிசையாக வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியல் ஆ…வென்று வாய்பிளக்கச் செய்துள்ளது.

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்ற திருமணத்துக்குப் பிறகு, புகுந்த வீட்டுக்குச் சென்றுள்ள மணமகள் மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழவேண்டும் என்பதற்காக சீர் வரிசைப் பொருட்கள் வழங்கிவரும் வழக்கம் இந்தியா முழுவதும் உள்ளது. அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப சீர்வரிசை வழங்கும் வழக்கம் இருந்தாலும், தமிழகத்தில் இந்த வழக்கம், அந்தஸ்தை வெளிப்படுத்தும் செயலாகவும் உள்ளது.

அதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது இந்த வீடியோக் காட்சி. இது செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள வழக்கமாகக் கருதப்படுகிறது.

செட்டிநாடு என்றாலே நினைவுக்கு வருவது அரண்மனை போன்ற பிரம்மாண்டமான வீடுகளும், விதம்விதமான உணவுகளும்தான். அந்த வகையில், தற்போது சீர்வரிசைப் பொருட்களும் இடம்பிடித்துள்ளது.

அந்த வீடியோவில் சீர்வரிசைப் பொருட்கள் பட்டியலில் வெள்ளி அம்மிக்கல் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டது. மிக்ஸி, கிரைண்டர் வருகைக்குப் பிறகு அம்மிக்கல் காணாமல் போய்விட்டது என்றே கூறலாம்.

அம்மிக்கல் என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு மறந்தே போய்விட்டது இன்றைய இளந்தலைமுறை. ஆனாலும், வெள்ளியானாலான அம்மிக்கலை சீதனமாக வழங்கி அசத்தியுள்ளனர் ஒரு பெற்றோர்..

விளையாடுவதற்கு வெள்ளியாலான பல்லாங்குழியும் சீர்வரிசையில் உள்ளது. இட்லிப் பானை, குழம்புப் பாத்திரம். வெள்ளித் தட்டு, வெள்ளித் தம்ளர், வெள்ளித் தாம்பாளம், வெள்ளிக் குத்துவிளக்கு, வெள்ளிச் சங்கு உள்பட பல்வேறு சீதனப் பொருட்கள் உள்ளன.

இந்த சீர்வரிசைப் பொருட்கள் பாசத்தின் வெளிப்பாடா, பண்பாட்டின் வெளிப்பாடா, பொருளாதாரப் பலத்தின் வெளிப்பாடா என்பது அவற்றை வழங்கிய பெற்றோருக்கே தெரியும். என்றாலும், மணமக்கள் சிறப்பாக வாழவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணமாக இருக்கும் என்பதே பெற்றோர்களின் கருத்தாகக் கருதப்படுகிறது.

அதேசமயம், இதைப் பார்த்து வருங்கால மணமக்கள் இவற்றைப்போன்றே தங்களுக்கும் தரவேண்டும் என நிர்பந்தித்தால் என்ன ஆவது என்று கேட்கிறார்கள் ஏழைப் பெற்றோர்…