பலத்த காற்றுடன் மழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!!

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால் இந்த மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இன்று முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஜூலை 24-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் லேசான மழை பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News