இந்திய கிரிக்கெட்டின் ‘தடுப்பு சுவர்’ என்று புகழப்படுபவர் ராகுல் டிராவிட். வீரராக மட்டுமின்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தவர். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.
இவரின் மகன் சமித் டிராவிட். 19 வயதான சமித்தை அண்மையில் நடைபெற்ற, கர்நாடகா மகாராஜா டிராபி ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்து, பின்னர் முழங்கால் காயம் காரணமாக சமித் விலகிவிட்டார்.
இந்தநிலையில் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் நடத்தும், கர்நாடகா மகாராஜா டிராபியின் நான்காவது சீசனுக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. இதில் சமித் டிராவிட்டை எந்தவொரு அணியும் வாங்கவில்லை.
கடந்த வருடம் மைசூரு வாரியர்ஸ் அணி சமித்தை ரூபாய் 50 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 7 போட்டிகளில் ஆடி 82 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக அவரை எடுக்க அணிகள் தயங்குவதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பெங்களூரூ அணியின் அதிரடி வீரர் தேவ்தத் படிக்கல்லை, ஹுப்ளி டைகர்ஸ் அணி அதிகபட்சமாக 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதேபோல அபினவ் மனோகரை அந்த அணி 12 லட்சத்துக்கு வாங்கியது. மற்றொரு வீரரான மனிஷ் பாண்டேவை மைசூரு வாரியர்ஸ் அணி, 12 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.