தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தலை தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். சில இடங்களில் மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகையிடப்படுகின்றன.முதலமைச்சர் விஜய்யின் தொகுதியான சென்னை பெரம்பூர் உதயசூரியன் நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகத் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள், மின்வாரியத்தைக் கண்டித்து நேற்றிரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சுமார் 3 மணி நேரமாக மின்வெட்டு நீடித்ததால் மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினர்.இந்நிலையில் மின்வாரியத்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான். அதனை நாங்கள் மறைக்கவோ, மறுக்கவோ தயங்கவில்லை. எனினும், இது மின்சார விநியோகத்தினால் ஏற்படும் பிரச்சனை அல்ல, மின் பகிர்மானத்தால் மட்டுமே இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறினார்.
இரவு நேரங்களில் திடீரென அதிகரிக்கும் மின்சாரத் தேவை, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளில் ஏற்படும் கூடுதல் சுமை போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் மட்டுமே இந்தத் தடங்கல் ஏற்படுகிறது.மேலும், மின்தடை தொடர்பாக முதலமைச்சர் இரண்டு முறை ஆய்வு செய்துள்ளார். துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரும் வாரத்திற்கு 3 முறை ஆய்வு செய்துகொண்டு இருக்கிறார். எனத் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்
