மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், போலீசாரின் கவனக்குறைவு மற்றும் நிர்வாகப் பிழையால், ஒரு தலைமைக் காவலர் 12 ஆண்டுகள் ஒரு நாள் கூட பணிக்கு வராமல், ரூ.28 லட்சம் சம்பளம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காவலர் 2011ஆம் ஆண்டு போபால் காவல்துறை பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பிறகு, அவர் சாகர் காவல்துறை பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சேராமல், நேராக விதிஷாவில் உள்ள வீட்டுக்கு வந்துவிட்டார்.
தனது உயர் அதிகாரிகள் யாரிடமும் விடுப்பு கேட்காமல், தன்னுடைய பணி ஆவணங்களை விரைவுஅஞ்சல் மூலம் போபால் காவல்துறைக்கு அனுப்பியிருக்கிறார். அங்கு அந்த ஆவணத்தை எந்த விசாரணையும் இன்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டு காவலர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பரிசீலித்தபோதுதான். இந்த தலைமைக் காவலர் பெயரை ஆலோசித்தபோது, அப்படியொருவரை யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான், ஒரு நாள் கூட காவலராக பணியில் சேராத ஒருவருக்கு கடந்த 12 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டு வந்ததே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது, அவர் மனநலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்றதாக ஆவணங்களுடன் பதிலளித்துள்ளார். தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.