தமிழகம் முழுவதும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ‘ உங்களுடன் ஸ்டாலின் ‘திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர் ஐ, வி.ஏ.ஓ., கையெழுத்துடன் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வைகை ஆற்றில் கொட்டிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி உள்ளது. மனுக்களை ஆற்றில் வீசிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அதன் சமூக வலைதள பக்கத்தில் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அந்த பதிவில், “பொதுமக்கள் அளித்த மனுக்களை தூக்கி எறிந்த திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.