Thursday, October 9, 2025

‘அமைதி அதிபர்’ டிரம்ப்! அடைமொழி கொடுத்தது யார்? நோபல் பரிசு இல்லை என்றாகிவிட்ட நிலையில் அதிரடி!

அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 10ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஆனால், அது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. இதே நிலையில், வெள்ளை மாளிகை ட்ரம்ப்பின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் “அமைதி அதிபர்” அதாவது The Peace President என்ற அடைமொழி வழங்கியுள்ளது.

‘இந்தியா–பாகிஸ்தான் மோதல் உள்பட 7 போர்களை நிறுத்திவிட்டேன்’ என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த ட்ரம்ப், தற்போது ‘நார்வேஜியன் நோபல் கமிட்டி எப்படியாவது தன்னை விலக்கிக் கொள்ளும் காரணங்களைத் தேடும்’ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்திற்கும் ட்ரம்பின் முன்னெடுப்பு காரணமாக வாய்ப்பு உருவாகியுள்ளது. இருந்தபோதும், தனது கனவான அமைதிக்கான நோபல் பரிசு தன்னிடம் வந்து சேராது என்ற மனநிலை அவரிடம் உருவாகி விட்டது.

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் ஒருவர், ‘நீங்கள் நோபல் பரிசு பெறும் சாத்தியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பியபோது, ட்ரம்ப், ‘எனக்கு எந்த கருத்தும் இல்லை. மார்கோ ரூபியோவிடம் கேட்டால் நாங்கள் 7 போர்களை நிறுத்தியிருப்பதை அவர் உறுதிப்படுத்துவார். 8-வது போர் நிறுத்தமும் நெருங்கி விட்டது. ரஷ்யப் போரையும் விரைவில் முடிப்போம். வரலாற்றில் இத்தனை போர்களை நிறுத்தியவர் யாரும் இல்லை. இருந்தாலும், நோபல் கமிட்டி எனக்கு பரிசளிக்காமல் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிடும்’ என்று தெரிவித்தார்.

அவரது முதல் அதிபர் பதவிக்காலத்திலும் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கு மாறாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு முதல் பதவிக்காலத்திலேயே அந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News