ஒரே திரைப்படத்தை இளைஞர் ஒருவர் 3 மாதங்களுக்குள்
292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நம்மில் பலர் ஒரு திரைப்படத்தைப் பலமுறைப் பார்த்து
ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரே
திரைப்படத்தைப் பார்ப்பதில் சலிப்படையாமல்
அப்படத்தைப் பார்த்தது பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறோம்.
இருப்பினும், உங்களுக்குப் பிடித்த படத்தை 292 முறை அல்லது
அதற்குமேல் பார்த்திருப்பீர்கள் என்று உங்களில் எத்தனைபேர்
முழு நம்பிக்கையுடன் சொல்லமுடியும்?
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராமிரோ
அலனிஸ் என்ற இளைஞர் நோ வே ஹோம் என்ற திரைப்படத்தை
292 முறைப் பார்த்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி முதன்முறையாக
‘நோ வே ஹோம்’ திரைப்படத்தைப் பார்த்த அவர் 2022 ஆம் ஆண்டு,
மார்ச் 15 ஆம் தேதிக்குள் 292 முறை சலிக்காமல் பார்த்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் இப்படத்தை சராசரியாக அவர் 5 முறைப்
பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இத்தனை முறையும் மொத்த
டிக்கெட் கட்டணமாக ஏறக்குறைய 3 ஆயிரத்து 400 டாலர் செலவு
செய்துள்ளார். இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 60
ஆயிரம் ரூபாய்க்கு சமம் ஆகும்.
இப்படிச்செய்வது முதன்முறை அல்ல. இதற்குமுன்பு 2019 ஆம்
ஆண்டில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ என்ற திரைப்படத்தை
191 முறைப் பார்த்து சாதனை படைத்துள்ளார்.
இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கும்வரை திரையுலகை யாரும்
அசைச்சுக்கவே முடியாது.