ஆன்லைனில் பொருள் வாங்கும்போது இதை மறக்கக்கூடாது

303
online-purchase
Advertisement

செல்போனுக்குள் உலகம் என்ற அளவில் வாழ்க்கை சுருங்கி விட்டதால் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. செல்போன் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைனில் சலுகை விலையில் கிடைப்பதால் ஆன்லைன் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் ஆன்லைனில் ஆர்டர்கள் சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிக்கின்றன. விலையுயர்ந்த சில பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஆர்டர் செய்யாத பொருட்களோ தரம் குறைவான பொருட்களோ அனுப்பப்படுகின்றன. எனவே ஆன்லைனில் பொருள் வாங்குவோர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.

அதிக விலை கொண்ட பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, அது வீட்டுக்கு வரும் போது, அதனைக் கொண்டு வருபவரை பிரித்துக் காட்டும்படி சொல்லலாம். நீங்கள் ஆர்டர் செய்த பொருள் உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் ஆர்டர் செய்த பொருள் அனுப்பப்படவில்லை என்றால் அதை அப்போதே நிராகரித்து விட்டு புகாரளிக்கலாம்.

மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை, கொண்டு வருபவரை பிரிக்கச் சொல்லி வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கலாம். ஏனென்றால், பார்சலை திறக்கும் போது எடுக்கப்படும் வீடியோ அல்லது புகைப்படத்தை ஆன்லைன் வணிக நிறுவனங்கள் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்கின்றன.

அதேவேளையில், வாங்கிய பொருள் சரியாக இல்லையென்றால், அதனை மாற்றி சரியான பொருளையோ  பணத்தையோ ஆன்லைன் வணிக நிறுவனங்கள் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் 1800114000 என்னும் தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் புகார் அளிக்கலாம்.

அதற்கு மாற்றாக 8130009809 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் புகாரை அனுப்பலாம். அதனைத் தொடர்ந்து நுகர்வோர் ஆணையத்திலிருந்து உங்களை தொடர்பு கொண்டு புகாரை விசாரிப்பார்கள். மேலும்,தேசிய நுகர்வோர் ஆணையத்தின் இணையதள பக்கத்திலும் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

உங்களால் முடிந்தவரை நம்பிக்கைக்கு உரிய, சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்கினால் தேவையில்லாத சிரமங்களை தவிர்க்கலாம்.

அமேசான்,ஃபிலிப்கார்ட்டில் பொருட்களை வாங்கும் போது, அமேசான் ஃபுல்ஃபில்டு அல்லது ஃபிலிப்கார்ட் அஷ்யூர்ட் போன்றவற்றின் வாயிலாக வாங்குவது நல்லது. ஏனெனில் இவற்றில் மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமேசான் அல்லது ஃபிலிப்கார்ட் வழியாக விற்பனை செய்து டோர் டெலிவரி செய்வதாக இருந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்யும்போதே அதை டெலிவரி செய்வது அமேசான் அல்லது ஃபிலிப்கார்ட் நிறுவனமா என்பது உங்களுக்கு தெரிந்து விடும்.

பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே டோர் டெலிவரி செய்வதாக இருந்தால் வீட்டிற்கு வரும் பார்சலை கொண்டு வருபவரை பிரிக்கச் சொல்லி வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி  நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

ஆன்லைன் மோசடிகள் தற்போது அடிக்கடி நடப்பதால் போதிய விழிப்புணர்வுடன் இருந்தால் இழப்புகளை தவிர்க்கலாம்.