வங்கி கணக்கில் திடீரென பணம் கழிக்கப்படும் பயம் இனி குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ள புதிய இ-ஆணை அதாவது e-mandate விதிமுறைகள், தானியங்கி பணப்பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. EMI, காப்பீடு, OTT சந்தா போன்ற கட்டணங்கள் மாதந்தோறும் தானாக கழிக்கப்படும் முறையில், இப்போது பயனாளிகளுக்கு அதிக கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, எந்த ஆட்டோ-டெபிட் சேவையும் தொடங்குவதற்கு முன் கட்டாயமாக ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். அதோடு, கூடுதல் அங்கீகார செயல்முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனாளியின் அனுமதி இல்லாமல் எந்த நிறுவனமும் பணத்தை கழிக்க முடியாது என்பதில் உறுதி கிடைக்கிறது.
மேலும், ஒவ்வொரு தானியங்கி பணப்பரிவர்த்தனைக்கும் 24 மணி நேரத்திற்கு முன்பாக அறிவிப்பு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நிறுவனத்தின் பெயர், கழிக்கப்படும் தொகை, தேதி உள்ளிட்ட முழு விவரங்களும் இடம்பெறும். இதில் ஏதேனும் தவறு அல்லது சந்தேகம் இருந்தால், பயனாளர் உடனடியாக அந்த பரிவர்த்தனையை நிறுத்திக் கொள்ளலாம்.
அத்துடன், ரூ.15,000 வரை உள்ள தானியங்கி பணப்பரிவர்த்தனைகளுக்கு OTP தேவையில்லை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு கட்டணம் போன்ற முக்கிய சேவைகளுக்கு இந்த வரம்பு ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளின் மூலம், பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் தங்களது இ-ஆணைகளை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். மேலும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மாற்றப்பட்டாலும் தானியங்கி கட்டணங்கள் தொடர்ந்து செயல்படும். OTT சந்தாக்கள், பில்கள், EMI போன்ற பல சேவைகள் இதில் அடங்கும். எனினும், பாஸ்டேக் தானியங்கி ரீசார்ஜ் இந்த விதிகளுக்கு உட்பட்டதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
