அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரின் ஒரு தேவாலயத்தில், நேற்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மாணவர்கள் மீது ஒரு நபர் கொலைவெறியோடு துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் இருந்த வாசகங்கள் தொடர்பான தகவல்கள் கடும் அதிர்வலைகளை கிளப்பிவிட்டுள்ளது.
23 வயதான ராபின் வெஸ்ட்மேன் எனும் இளைஞர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். அவரது யூட்யூப் சேனல் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக ராபின் பதிவிட்ட வீடியோ தற்போது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்த வீடியோவில், ஆயுதங்கள், தோட்டாக்கள் இருக்கின்றன. மேலும் அந்த ஆயுதங்களில், ‘டொனால்ட் ட்ரம்பை கொல்ல வேண்டும், ட்ரம்பை இப்போதே கொல்ல வேண்டும், இஸ்ரேல் கட்டாயம் வீழ்ச்சி அடைய வேண்டும், இஸ்ரேலை எரியுங்கள், இந்தியா மீது அணு ஆயுதம் வீசுங்கள், உங்கள் கடவுள் எங்கே? மற்றும் குழந்தைகளுக்காக’ போன்ற வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.
மின்னபோலிஸ் தாக்குதலை நடத்திய ராபின், சட்டப்பூர்வமாகவே கொலைக்கான ஆயுதங்கள் அனைத்தையும் வாங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆணாக பிறந்து ராபர்ட் என அறியப்பட்ட அவர், பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த 2022ம் ஆண்டு முதல் ராபின் என தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டதையும் காவல்துறை தற்போது உறுதி செய்துள்ளது.