மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ஒருபக்கம் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், மறுபக்கம், அந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்களையே குறிவைத்து ஒரு நூதன மோசடி அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டுக்கு வரும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுமார் 2 கிலோ மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், தவெக தொண்டர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்தே மாநாட்டுத் திடலுக்கு வரவேண்டிய சூழல் உள்ளது.
இப்படி தாகத்துடன், சோர்வாக நடந்து வரும் தொண்டர்களைத்தான் ஒரு கும்பல் குறிவைத்துள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆங்காங்கே நின்று கொண்டு, “வாங்க தம்பி, இலவசமா மோர் குடிச்சிட்டு போங்க” என்று அன்பாக அழைக்கிறார்கள். வெயிலில் நடந்து வந்த களைப்பில், தொண்டர்களும் அதை நம்பி மோர் குடிக்கிறார்கள்.
மோர் குடித்து முடித்த அடுத்த கணமே, அந்தப் பெண்களின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. “ஒரு டம்ளர் 10 ரூபாய், 20 ரூபாய் கொடுங்க” என்று அவர்கள் குரல் மாறுகிறது. அதிர்ச்சியடைந்த தொண்டர்கள், “இலவசம்னு தானே சொன்னீங்க?” என்று கேட்டால், வாக்குவாதம் செய்கிறார்கள். பணம் தர மறுத்தால், சட்டையைப் பிடித்து அடாவடியில் ஈடுபடுவதாகவும், பணம் பறிப்பதாகவும் தொண்டர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
வேறு வழியின்றி, கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, ஏமாற்றத்துடன் தொண்டர்கள் புலம்பியபடியே செல்கின்றனர். இந்த நூதன மோசடி இப்போதுதான் நடக்கிறது என்பதில்லை. இதே போன்ற சம்பவம், விக்கிரவாண்டியில் நடந்த தவெக-வின் முதல் மாநில மாநாட்டிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெரிய மோசடி சம்பவம் நடந்தும், அங்கிருக்கும் பாதுகாப்பு போலீசாரோ அல்லது தவெக நிர்வாகிகளோ இதைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஒருபக்கம், லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக தடபுடல் உணவு, பிரம்மாண்ட மேடை என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மறுபக்கம், மாநாட்டுக்காக வந்த அடிப்படைத் தொண்டர்களிடம் இப்படியொரு மோசடி நடப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.