திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றிரவு அங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து அமரேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அமரேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1,000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது வட மாநில தொழிலாளர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்தனர்.