இனி தாயுமானவர் திட்டம் இல்லை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் தற்போது ‘பொது விநியோகத் திட்டம்’ என மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இனி திட்டம் புதிய பெயரில் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ‘நான் முதல்வன்’, ‘மகளிர் விடியல் பயணம்’, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களுக்கு புதிய பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த வரிசையில் தற்போது ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டமும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைவு அல்லது பிற காரணங்களால் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத பயனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்ட முக்கிய சமூக நலத் திட்டமாகும். இதன் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக கொண்டு சென்று வழங்கப்படுகின்றன.

திட்டத்தின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல், அதன் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தகுதியான பயனாளிகள் தொடர்ந்து வீடு தேடி பொது விநியோகப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Related News

Latest News