கடந்த மே மாதம் சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மதுரை ஆதீனம் மே 2 ம் தேதி மதுரையில் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில் சிக்கியது.
விபத்தின் மூலம் தன்னைக் கொல்லை பாகிஸ்தான் சதி செய்வதாகவும், விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த நபர்கள் தாடி வைத்திருந்ததாகவும், குல்லா அணிந்திருந்ததாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆதீனத்தின் மனுவுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.