தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். சுங்க வசூல் முறையை எளிமைப்படுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்காக புதிய டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள், தங்களின் வாகனங்களுக்கான லோக்கல் பாஸை ராஜமார்க்யாத்ரா (Rajmargyatra) மொபைல் செயலி மூலம் ஆன்லைனிலேயே பெறலாம். இதற்கு முன்பு சுங்கச்சாவடி அலுவலகத்திற்குச் சென்று குடியிருப்பு சான்று மற்றும் வாகன ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ் பெற வேண்டியிருந்தது. தற்போது இந்த செயல்முறையை சில நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் முடிக்கலாம்.
இந்த செயலி, VAHAN தரவுத்தளத்தில் உள்ள முகவரி, வாகன பதிவு எண் மற்றும் FASTag விவரங்களை சரிபார்த்து, தகுதியின் அடிப்படையில் லோக்கல் பாஸை வழங்கும். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள தடையற்ற (Multi-Lane Free Flow) சுங்க வசூல் முறையில் உள்ளூர்வாசிகள் தேவையற்ற அபராத நோட்டீஸ்களைத் தவிர்க்க முடியும்.
வணிகம் அல்லாத வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகள் மாதம் ரூ.350 செலுத்தி இந்த பாஸைப் பெறலாம். இதன்மூலம் அந்த மாதம் முழுவதும் அந்த குறிப்பிட்ட சுங்கச்சாவடியை எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுதல் கட்டணமின்றி பயன்படுத்த முடியும்.
இந்த வசதி முதற்கட்டமாக டெல்லி முண்ட்கா–பக்கர்வாலா சுங்கச்சாவடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழகத்தின் நெமிலி, சென்னசமுத்திரம், பரனூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் விரைவில் இந்த டிஜிட்டல் பாஸ் முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
