தவெக ஆட்சிக்கு புதிய தலைவலி: இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை!! நடந்தது என்ன?

தமிழகத்தில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

இதனிடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

மேலும், முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறி, இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது.

தடையை நீக்கக் கோரி முன்னாள் எம்எல்ஏக்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதாகக் கூறி தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், இடைக்காலத் தடையை நீட்டித்து, வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் 5 தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News