தமிழர்களின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் இலக்கியக் காலத்திலிருந்தே தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி என்னும் பெயரில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல், நரி ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வீரவிளையாட்டாக இருந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி கிராமத்தில்தான் இந்த விநோத ஜல்லிக்கட்டு கடந்த 100 ஆண்டுகளாக நடந்துவருவதாக அந்தக் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள சின்னமநாயக்கன் பாளையம், கொட்டவாடி, ரங்கனூர், மத்தூர், பெரிய கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நெற்பயிர் அறுவடை முடிந்தபின்னர் நரி ஜல்லிக்கட்டு நடத்திவந்துள்ளனர்.
இதற்காக, காட்டிலுள்ள வங்கா என்னும் நரியைப் பிடித்துவந்து கிராமத் மீண்டும் நடவுசெய்யும்முன் நரி ஜல்லிக்கட்டு நடத்தினால் விளைச்சல் அதிகரிக்கும் என்னும் நம்பிக்கையில் பொங்கல் திருநாளன்று இந்தப் போட்டியை நடத்திவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வங்கா நரிகள் தரிசு நிலம், சிறுகாடு, நீர்நிலை போன்றவற்றின் அருகிலுள்ள புதர்களில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு முந்தைய நாளில் வலைவிரித்துவிட்டு வருவார்கள் அப்பகுதி மக்கள்.
வலையில் அகப்பட்ட வங்கா நரிகளைப் பிடித்து ஊருக்குள் கொண்டுவந்து அலங்கரித்து ஊர்வலமாகச் செல்வார்கள். அதன்பிறகு, அதன் காலில் கயிற்றைக் கட்டி சிறிது தூரம் ஓடவிடுகின்றனர். இந்தப் போட்டியைக் கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து ரசிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு விழா நடத்தியபின் அந்த வங்கா நரிகளை, அவற்றின் வாழ்விடங்களிலேயே கொண்டுசென்று விட்டுவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும், நரி ஜல்லிக்கட்டு நடத்தத் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கி மீண்டும் நரி ஜல்லிக்கட்டை நடத்தத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.