அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்திருப்பதன் விளைவாக, உலக நாடுகள் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக வளைகுடா பகுதிகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டதால், எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் உருவானது. இதன் தாக்கமாக பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுடன், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், இரண்டு சிலிண்டர் இணைப்பு கொண்டவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளையும் உயர்த்தின.
இந்த சூழலில், எரிவாயு முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர் சுஜாதா ஷர்மா கலந்து கொண்டார்.
கூட்டத்திற்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது, வெளிநாட்டு நெருக்கடியை சமாளிக்க, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலிண்டர் முன்பதிவுக்கான கால வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் நகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை எங்கும் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை என்றும் அவர் உறுதியளித்தார். விநியோகம் தற்போது சீரான நிலையில் நடைபெற்று வருகிறது.
எரிவாயு கள்ளச்சந்தை மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்கும் வகையில், விநியோக அங்கீகாரக் குறியீடு அதாவது DAC முறை கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிய நுகர்வோருக்கு நேரடி விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. கடல் வழி எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பையும் அரசு வலுப்படுத்தி வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
