Monday, September 1, 2025

அமலுக்கு வந்துள்ள சுங்கக் கட்டண உயர்வு : வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

தமிழ்நாட்டில், 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில், நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கார் மற்றும் பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 105 ரூபாய் கட்டணம் அப்படியே தொடர்கிறது. ஆனால், பலமுறை பயணிப்பதற்கான கட்டணம் 155 ரூபாயிலிருந்து 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாதாந்திரக் கட்டணத்தில் 70 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 170 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் 5 ரூபாய் உயர்ந்து 185 ரூபாயாகவும், பல முறை பயணிக்க 275 ரூபாயும், மாதாந்திரக் கட்டணம் 125 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 545 ரூபாயாகவும் வசூலிக்கப்படுகிறது.

லாரி, பேருந்துகளுக்கு ஒரு முறை பயணத்திற்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 10 ரூபாய் உயர்ந்து 370 ரூபாயாக வசூல் செய்யப்படுகிறது. பல முறை பயணத்திற்கு 15 ரூபாய் உயர்ந்து, 555 ரூபாயும், மாதாந்திரக் கட்டணத்திற்கு 240 ரூபாய் உயர்த்தப்பட்டு 11 ஆயிரத்து 85 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

பல சக்கரங்கள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் 595 ரூபாயாகவும், பல முறை பயணிக்க 890 ரூபாயாகவும், மாதாந்திரக் கட்டணம் 17 ஆயிரத்து 820 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சுங்கக்கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News