தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 6 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல், நீலகிரி, திருவள்ளூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில், தமிழகத்தில் 28 ஆகஸ்ட் மற்றும் 29 காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, ” ஒரிசா-மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன், காரணமாக, இன்று அதாவது, ஆகஸ்ட் 28 தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஆகஸ்ட் 29) தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
வரும் செப்டம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். அதேவேளை, 28 ஆகஸ்ட் மற்றும் 29 தேதிகளில் 2-3 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே மக்களே வெளியப்போகும் போழுது உங்க குடையை எடுக்க மறந்துடாதீங்க!