இணையத்தைக் கலக்கும் மெலோனி + மோடி= ‘Melodi’ சாக்லேட்! சம்பவம் செய்த ‘parle’!

சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ட்ரெண்டாக மாறிய ‘மெலோடி’ (Melodi) தருணத்தை, தற்போது ஒரு சுவையான வணிக வாய்ப்பாக மாற்றியுள்ளது பிரபல பார்லே (Parle) நிறுவனம். கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ஒரு பாக்கெட் ‘மெலடி’ சாக்லேட்டைப் பரிசாக வழங்கினார். இணையவாசிகள் இரு தலைவர்களின் பெயரையும் இணைத்து ‘மெலோடி’ என அழைத்து வந்த நிலையில், பிரதமரின் இந்தச் செயல் சர்வதேச அளவில் ஒரு ஜாலியான விவாதத்தைத் தூண்டியது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மெலடி சாக்லேட்டின் புகழ் எல்லைகளைத் தாண்டிப் பரவியது.

இந்த வைரல் தருணத்தைக் கொண்டாடும் விதமாகவும், இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் போற்றும் விதமாகவும், ‘மெலடி திராமிசு’ (Melody Tiramisu) என்ற புதிய வகை சாக்லேட்டை பார்லே நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பாரம்பரிய இனிப்பு வகையான திராமிசு-வின் காபி சுவையையும், மெலடியின் வழக்கமான சாக்லேட் மற்றும் கேரமல் சுவையையும் இணைத்து இந்தத் தனித்துவமான மிட்டாய் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு எடிஷன் சாக்லேட் பாக்கெட்டுகளில் ‘இந்தியா – இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்’ என்ற வாசகமும் மிக அழகாக அச்சிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த ‘மெலடி திராமிசு’ சாக்லேட், அனைத்து இடங்களிலும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோகத் தளமான பிளிங்கிட் (Blinkit) மூலம் மட்டுமே இது பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ராஜதந்திரச் சந்திப்பில் எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம், எப்படி ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய விளம்பரமாக மாறியது என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். பிரதமர் மோடி சாக்லேட் வழங்கிய வீடியோவை மெலோனி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து ‘பரிசிற்கு நன்றி’ எனத் தெரிவித்த போதே, ஏர் இந்தியா, ஜெப்டோ போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த விவாதத்தில் குதித்தன.

தற்போது அறிமுகமாகியுள்ள இந்த லிமிடெட் எடிஷன் மெலடி சாக்லேட் குறித்து, ரெடிட் (Reddit) உள்ளிட்ட தளங்களில் பயனர்கள் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக காபி சுவை கலந்த இந்தத் புதிய மெலடி, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரதமரின் ஒரு சிறிய பரிசுப் பொருள், இன்று ஒரு புதிய தயாரிப்பாக உருவெடுத்துச் சந்தையை அதிர வைத்துள்ளது.

Related News

Latest News