Friday, July 4, 2025

திருமணம் செய்துகொள்வதாக கூறி லட்சக்கணக்கில் சுருட்டிய பெண் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு வரன் தேடி திருமண செயலி மூலம் பதிவு செய்திருந்தார். அப்போது பிரியா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்த நிலையில் பிரியா தனது அக்காவின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என அந்த விவசாயிடம் ஒரு வருடத்தில் ரூ. 7 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.

பின்னர் விவசாயி உடனான திருமணத்தை பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்த பிரியா, ஒரு கட்டத்தில் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து அந்த விவசாயி, பிரியா கொடுத்த நாமக்கல் விலாசத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பிரியா கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்தது.

இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி புகார் அளித்தார். புகாரின் பெயரில் நடவடிக்கை எடுத்த போலீசார் பிரியா என்ற அந்த பெண் சேலத்தை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே அவருக்கு இரண்டு முறை திருமணம் ஆனவர் என்பதும் தெரியவந்தது.

பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி மட்டுமின்றி பல பேரிடமும் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news