சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடந்த விவாதம், சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது.
ஒருபுறம், தெரு நாய்கள் கடிப்பது, வாகன விபத்துகள், மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்து மக்கள் தங்கள் அச்சத்தைப் பதிவு செய்தனர். மறுபுறம், நாய்கள் அப்பாவி உயிர்கள் என்றும், அவற்றுக்குக் கருணையும் பாதுகாப்பும் தேவை என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வாதிட்டனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஐந்தாவது மாநாட்டில் நடிகை ரோகிணி கலந்துகொண்டார். அப்போது அவர், ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் நடந்த விவாதம் குறித்துப் பேசத் தொடங்கினார். “இப்போது உள்ள சூழ்நிலையில், நாய்களின் உயிருக்காக நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். ஆனால், அதேபோல் மனித உயிர்களுக்காகவும் கவலைப்படுங்கள் என்று காலம் காலமாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
தீண்டாமை ஒழிய வேண்டும்; மனிதர்களுக்குள்ளே பாகுபாடு இருக்கக் கூடாது என்று நாங்கள் சொல்கிறோம். அதற்காகச் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.” “சட்டங்கள் இயற்றினாலும், மனித மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்கு கலை என்பது மிகப்பெரிய ஆயுதம். கலை மூலம் நாம் மனித மனதின் எண்ணங்களை மாற்ற முடியும்” என்று அவர் பேசினார்.