குடியரசு தின விழாவையொட்டி, நேற்று ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக, காவல்துறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இதை அடுத்து அந்த நபர், தூத்துக்குடி மாவட்டம் திருபுளியங்குடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகளும் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அருண்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, கஞ்சா போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக குற்றவாளி தெரிவித்தார்.