விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (21) என்பவர் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இரவு, வெளியில் சென்றுவிட்டு கோயம்பேடு செல்வதற்காக, விருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், ஆறுமுகத்திடம் தாங்கள் கோயம்பேடு செல்வதாகவும், அங்கே இறக்கி விடுவதாகவும் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வளசரவாக்கம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆறுமுகத்தை தாக்கிய அவர்கள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அவர் வளசரவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த விஜய்பிரசாத் (27) என்பவரை தற்போது கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆறுமுகத்தின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
