தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்கோடு உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண்” சிறப்புப் படை, இப்போது ஒரு மிக முக்கியமான மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது. வெறும் பெயர் அளவில் மட்டுமல்லாமல், தோற்றத்திலும் இந்தப் படைக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படைக்கென்று பிரத்யேகமான ஒரு லோகோ மற்றும் தனித்துவமான சீருடையை வடிவமைக்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாகக் காவல்துறை என்றால் ஒரே மாதிரியான சீருடைதான் இருக்கும். ஆனால், இந்தப் படையினரைக் கண்டாலே குற்றவாளிகளுக்கு ஒரு பயமும், பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, இந்தத் தனித்துவமான சீருடை மற்றும் இலச்சினை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் படை தனது ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கிவிட்டாலும், விரைவில் நடைபெற உள்ள அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிற்குப் பிறகு, இவர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கப் போகிறார்கள். குறிப்பாக கோவை மண்டலத்தில், மாநகரப் பகுதியில் இரண்டு குழுக்களும், புறநகர்ப் பகுதியில் ஒரு குழுவும் என மூன்று சிறப்புக் குழுக்கள் தற்போதே தயார் நிலையில் உள்ளன.
இந்தப் படையினருக்கான பணி விதிகள், அவர்கள் செயல்பட வேண்டிய முறைகள் மற்றும் இவர்களுக்கென்று தனியாகச் சிறப்புப் காவல் நிலையங்கள் அமைக்கப்படுமா என்பது குறித்த முறையான வழிகாட்டுதல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளன. சாதாரணக் காவல்துறையினரிடம் இருந்து இவர்களை வேறுபடுத்திக் காட்டவும், ஒரு பிரத்யேகமான அடையாளத்தை உருவாக்கவும் இந்த லோகோ மற்றும் சீருடை முக்கியப் பங்கு வகிக்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெண்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் மனநல உதவிகள் எனப் பல பரிமாணங்களில் இந்த ‘சிங்கப்பெண்’ படை அதிரடி காட்டப்போகிறது. தமிழக காவல்துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த முயற்சி, பெண்களின் பாதுகாப்பில் எந்த மாதிரியான புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
