இந்திய அணியில் அதிரடி மாற்றம்! ‘பிசிசிஐ’-க்கு பறந்த வேண்டுகோள்!

2027-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் அவகாசம் இருந்தாலும், அதற்கான இந்திய அணியைத் தயார் செய்யும் பணிகள் இப்போதே தொடங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

குறிப்பாக, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு, இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில அதிரடியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஜஸ்பிரித் பும்ராவை மட்டுமே சார்ந்து இருப்பது பலவீனமாக அமையலாம் என அஸ்வின் எச்சரித்துள்ளார்.

இந்தச் சூழலில், இந்திய அணியிலிருந்து நீண்ட நாட்களாக ஓரங்கட்டப்பட்டுள்ள ஸ்விங் மாஸ்டர் புவனேஷ்வர் குமார் குறித்து அஸ்வின் மிக முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அஜித் அகர்கர் உடனடியாக புவனேஷ்வர் குமாரிடம் பேசி, அவரை மீண்டும் முதன்மை ஃபார்மிற்கு கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரும் காலங்களில் நடைபெறும் விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி டிராபி போன்ற அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் அவரை விளையாடச் செய்து, ஆப்பிரிக்க மண்ணில் நடக்கும் உலகக்கோப்பைக்கு அவரைத் தயார் படுத்த வேண்டும் என்றும், அங்கு புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு இந்தியாவிற்கு மிக அவசியம் என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

2027 உலகக்கோப்பைக்கான தனது உத்தேசப் பட்டியலை வெளியிட்டுள்ள அஸ்வின், வீரர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் மற்றும் பும்ரா ஆகியோருக்கு அணியில் உறுதியாக இடம் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை ‘வாய்ப்பிருக்கலாம்’ என்ற பிரிவில் வைத்துள்ளார். இளம் வீரர் ஹர்ஷித் ரானா மற்றும் புவனேஷ்வர் குமாரை ‘நிச்சயம் தேவை’ என்ற பட்டியலில் அவர் சேர்த்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அஸ்வின் வெளியிட்ட இந்தப் பட்டியலில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

குறிப்பாக, அதிரடி பேட்டர் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இளம் புயல் அபிஷேக் சர்மா மற்றும் ஐபிஎல் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு 2027 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என அஸ்வின் அதிரடியாகக் கூறியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கும் அவர் ‘நோ’ சொல்லியுள்ளார்.

அஸ்வினின் இந்தத் தனிப்பட்ட கணிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்வுக் குழு எந்த மாதிரியான முடிவை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News