சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு முடிந்த ஐ.பி.எல் சீசன் அந்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, அஸ்வின் போன்றவர்கள் மோசமான இன்னிங்ஸ்களை விளையாடி, அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றமடையாமல் செய்தனர்.
இருப்பினும் லீக் போட்டிகளின் கடைசியில், அணிக்கு இணைந்த ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் இடம் பெற்று, அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவதுடன் அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.
2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம், இந்த வருடம் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நடைபெறவிருக்கின்றது. அதற்குள் நவம்பர் 15-க்குள் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை ரிலீஸ் செய்யப்போகிறது என்ற தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக முக்கியமான ஸ்போர்ட்ஸ் ஊடகத்தின் கூற்றுப்படி, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, சாம் கரண், டெவோன் கான்வே ஆகியோரை சிஎஸ்கே விடுவிக்கப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது.
இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் ரியாக்ட் செய்திருக்கிறது. தனது எக்ஸ் தளப் பக்கத்தின் பயோவில், “நீங்கள் இதில் பார்க்கும் வரை எதுவும் அதிகாரப்பூர்வமானது இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறது.
