வளைகுடா பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் பதற்றம் இப்போது ஒரு இந்தியக் குடும்பத்தின் சோகமாக மாறியிருக்கிறது. உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், துரதிர்ஷ்டவசமாக இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஆறு இந்தியர்கள் உட்பட மொத்தம் எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இப்போது பொறுப்பேற்றுள்ள ஈரான், அதற்கான காரணங்களாகச் சில பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான ஐ.ஆர்.ஜி.சி (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘மொம்பசா’ மற்றும் ‘அல் பகியா’ ஆகிய இரண்டு கப்பல்களும் அந்தப் பகுதியில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அந்தக் கப்பல்கள் தங்களது நேவிகேஷன் சிஸ்டம் எனப்படும் திசைகாட்டும் கருவிகளைத் திட்டமிட்டே அணைத்து வைத்திருந்ததாகவும், ஈரானிய கட்டுப்பாட்டு மையம் விடுத்த தொடர் எச்சரிக்கைகளை மதிக்காமல் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்க ராணுவம் இந்தக் கப்பல்களை ஒரு சட்டவிரோதமான பாதை வழியாகவும், கண்ணிவெடிகள் நிறைந்த பகுதி வழியாகவும் வழிநடத்திச் செல்ல முயன்றதாகவும், அதனாலேயே அந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முடக்கியதாகவும் ஈரான் வாதிடுகிறது.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஓமன் நாட்டு கடல் எல்லைக்குட்பட்ட தெற்குப் பகுதியில் அமைதியான முறையில் பயணம் செய்து கொண்டிருந்த தங்களது கப்பல்கள் மீது, ஈரான் அநியாயமாக குரூஸ் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது சர்வதேச கடல்சார் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்றும், பிராந்திய அமைதிக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அமீரகம் சாடியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்திய மாலுமியின் உயிரிழப்பிற்கு ஈரானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமீரகம் காட்டமாகக் கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஹார்முஸ் ஜலசந்தியைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடக்கும் இந்தப் போட்டி, இப்போது அப்பாவி மாலுமிகளின் உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகத்தான் செல்கிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நாடுகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளதால், வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் காயமடைந்த இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதோடு, இந்தப் போர் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். வல்லரசு நாடுகளின் இந்த மோதலால் உலகப் பொருளாதாரமும், எரிபொருள் விலையும் இப்போதே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன.
