கடலுக்கு அடியில் சீனா செய்த மாயாஜாலம்! 603 ஹெக்டேர் பரப்பளவில் புதிய ராணுவத் தளம்?

தென் சீனக் கடலில் சீனா மேற்கொண்டு வரும் பிரம்மாண்டமான செயற்கைத் தீவு கட்டுமானப் பணிகள் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அண்மையில் வெளியான புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ‘ஆன்டெலோப் ரீஃப்’ (Antelope Reef) என்று அழைக்கப்படும் பவளப்பாறை பகுதியில் சீனா மேற்கொண்டு வந்த மணல் நிரப்பும் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 22 அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராட்சத மணல் வாரும் இயந்திரங்களுக்குப் பதிலாக, தற்போது கட்டுமானப் பொருட்களுடன் கூடிய பெரிய சரக்குக் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. இது, அந்தத் தீவு இப்போது கனரக உள்கட்டமைப்பு பணிகளுக்குத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.

சீனாவால் ‘லிங்யாங் ஜியாவோ’ (Lingyang Jiao) என்று அழைக்கப்படும் இந்தத் தீவு, சுமார் 603 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது தென் சீனக் கடலில் சீனாவின் மிகப்பெரிய மையமாக விளங்கும் ‘மிஸ்சீஃப் ரீஃப்’ (Mischief Reef) தீவுக்கு இணையான பரப்பளவாகும்.

இதற்கு முன்பு இந்தப் பகுதியில் சீனாவின் பெரிய தீவாகக் கருதப்பட்ட ‘வுடி ஐலேண்ட்’ (Woody Island) வெறும் 360 ஹெக்டேர் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நீல நிற சேமிப்புக் கிடங்குகள் மற்றும் சிமெண்ட் தயாரிப்பு ஆலைகள், அந்தத் தீவில் மிக விரைவில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் அமையப் போவதை உறுதிப்படுத்துகின்றன.

சீனாவின் இந்த விஸ்வரூப வளர்ச்சியை அண்டை நாடான வியட்நாம் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறது. ஏனெனில், இந்தத் தீவு அமைந்துள்ள இடம் வியட்நாமின் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. இங்கிருந்து சீனா தனது நவீன கண்காணிப்பு கருவிகள் மூலம் வியட்நாமின் ராணுவ நகர்வுகளை மிக எளிதாகக் கண்காணிக்க முடியும்.

ஆனால் சீனா தரப்பிலோ, இந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மட்டுமே இந்தக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி வருகிறது. அதே சமயம், கடல் சூழலைப் பாதுகாப்பதற்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

சர்வதேச சட்டங்கள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சீனா தனது தீவு கட்டும் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தியது. ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு மிகப்பெரிய செயற்கைத் தீவை உருவாக்கி முடித்திருக்கும் சீனாவின் இந்த வேகம், உலக வல்லரசு நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டத் துடிக்கும் சீனாவின் இந்தத் திட்டம், வரும் நாட்களில் அந்தப் பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய ராணுவ மற்றும் புவிசார் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Related News

Latest News