செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 1490 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும். இதில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிங்கம் உலா பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூண்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கைச் சூழலில் சிங்கங்களை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது இங்கு 3 ஆண் மற்றும் 4 பெண் என மொத்தம் 7 சிங்கங்கள் உள்ளன.
வயதான ‘ஷங்கர்’ என்ற ஆண் சிங்கத்திற்கு பதிலாக, கர்நாடகா பன்னார் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து ‘ஷெரியார்’ என்ற புதிய ஆண் சிங்கம் சமீபத்தில் வண்டலூருக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த புதன்கிழமை காலை, இந்த சிங்கம் கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டு பார்வையாளர்கள் காணும் வகையில் சஃபாரி பூங்காவில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஷெரியார் சனிக்கிழமை மாலை வரை கூண்டுக்குள் திரும்பவில்லை.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பூங்கா நிர்வாகம் ட்ரோன்கள் மூலம் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதிகாரிகள் விளக்கமளித்தபோது, ‘சிங்கம் பூங்காவுக்குள் தான் உள்ளது, வெளியில் போகவில்லை. முன்பு ‘புவனா’ என்ற பெண் சிங்கமும் 3 நாட்கள் காணாமல் போய் பின்னர் தானாகவே வந்தது. அதுபோல் ஷெரியாரும் விரைவில் திரும்பிவிடும்’ என தெரிவித்தனர்.
சுற்றுப்புறத்தில் 15 அடி உயரம் கொண்ட இரும்பு வேலி மற்றும் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால், சிங்கம் வெளியில் தப்பிச் செல்லும் வாய்ப்பு இல்லை எனவும் அவர்கள் கூறினர். எனினும், ஆண் சிங்கம் காணாமல் போன சம்பவம் வண்டலூர் உயிரியல் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.