ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் பாம்பு கடித்து சிங்கம் ஒன்று சனிக்கிழமை உயிரிழந்தது.தகவலின்படி,கூண்டில் இருந்த 15 வயது கங்கா என பெயர்கொண்ட ஆப்பிரிக்க சிங்கத்தை பாம்பு ஒன்று கடித்து உள்ளது.
மறுநாள்,காலை 8.30 மணியளவில் சிங்கம் கங்கா நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததை பூங்கா பராமரிப்பாளர் கவனித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.இதைத் தொடர்ந்து, பரிசோதனைக்குப் பிறகு சிங்கத்தில் தசை முடக்கம் மற்றும் பிற நரம்பியல் மாற்றங்களைக் கண்டறிந்தனர்.
பின்,சிங்கத்தின் கூண்டில் தடையும் ஏதும் கிடைக்கிறதா என சோதனை செய்ததில், உள்ளே பாம்பு ஒன்று சுருண்டபடி படுத்து உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனே சிங்கத்திற்கு விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கங்கா உயிரிழந்தது.இந்த சம்பவத்தை அடுத்து அலட்சியமாக இருந்த பூங்கா நிர்வாகிகள் மேல் விலங்கு நல அறக்கட்டளை ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது.ஆப்பிரிக்க சிங்கம் கங்கா இறந்த பிறகு, மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது.
தவிர, கங்கா இறந்த பிறகு உயிரியல் பூங்காவில் ஒரே ஒரு ஆப்பிரிக்க சிங்கம் மட்டுமே உள்ளது.2015 ஆம் ஆண்டில் கங்கா உட்பட நான்கு சிங்கங்கள் இஸ்ரேலில் இருந்து நந்தன்கானனுக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், அவர்களில் இரண்டு ஏற்கனவே ஆகஸ்ட் 2018-ல் இறந்துவிட்டன என்று தகவல்கள் தெரிவிக்கிறது.